வைணவம் வளர்த்த தமிழ் மாமுனி
9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
காட்டுமன்னார்கோயில் வீரநாராயணப் பெருமாள் ஆலயம். வெளியூர்களிலிருந்து வந்திருந்த அடியவர்கள்,
பாசுரங்கள் சிலவற்றைப் பாடி, பெருமாளைத் தொழுதுகொண்டிருந்தனர்.
“ஆரா
அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே, நீராய் அலைந்து,
கரைய உருக்குகின்ற
நெடுமாலே…………”
என்று
தொடங்கிய அவர்கள், இறுதியில்
“……….குருகூர்ச் சடகோபன், குழலின் மலியச் சொன்ன
ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்……” என்று முடித்தனர்.
பாசுரங்களைக்
கேட்டான், அர்ச்சகர் ஈஸ்வரபட்டரின் மைந்தன். அவற்றின் அழகிலும், இனிமையிலும் அவன் உள்ளம்
உருகியது. கண்ணீர் மல்கியது. பாசுரங்கள் சிலவற்றை மட்டுமே கேட்ட அவனுக்கு, அனைத்தையும்
கேட்கும் பேரவா எழுந்தது.

