வைணவம் வளர்த்த தமிழ் மாமுனி
9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
காட்டுமன்னார்கோயில் வீரநாராயணப் பெருமாள் ஆலயம். வெளியூர்களிலிருந்து வந்திருந்த அடியவர்கள்,
பாசுரங்கள் சிலவற்றைப் பாடி, பெருமாளைத் தொழுதுகொண்டிருந்தனர்.
“ஆரா
அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே, நீராய் அலைந்து,
கரைய உருக்குகின்ற
நெடுமாலே…………”
என்று
தொடங்கிய அவர்கள், இறுதியில்
“……….குருகூர்ச் சடகோபன், குழலின் மலியச் சொன்ன
ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்……” என்று முடித்தனர்.
பாசுரங்களைக்
கேட்டான், அர்ச்சகர் ஈஸ்வரபட்டரின் மைந்தன். அவற்றின் அழகிலும், இனிமையிலும் அவன் உள்ளம்
உருகியது. கண்ணீர் மல்கியது. பாசுரங்கள் சிலவற்றை மட்டுமே கேட்ட அவனுக்கு, அனைத்தையும்
கேட்கும் பேரவா எழுந்தது.
பாசுரங்களைத் தேடி
அவன்
துரதிர்ஷ்டம். அடியார்களுக்குத் தெரிந்திருந்தது, அந்தச் சில பாசுரங்கள் மட்டும்தான்.
இதனால்
அவன் சோர்ந்து விடவில்லை.
அவை
போலவே, மொத்தம் ஆயிரம் பாசுரங்கள் இருப்பதாக, அடியவர்கள் பாடிய கடைசிப் பாடல் தெரிவித்தது.
அத்துடன், அவை அனைத்தும் குருகூரைச் சேர்ந்த சடகோபன் பாடி அருளியவை என்றும் கூறியது.
‘எப்
பாடுபட்டேனும் இந்த அழகிய பக்திக் கருவூகங்கள் முழுவதையும் கண்டெடுத்து உலகிற்கு அளிப்பேன்’
என்று புறப்பட்டான் அவன்.
இவரே,
வைணவ உலகும், தமிழ் உலகும் ஒருங்கே போற்றும் மஹான் நாதமுனிகள்.
கிபி
824 ஆம் ஆண்டு ஆனி மாதம்,
அனுஷ நக்ஷத்ரத்தில், காட்டுமன்னார்கோயில் என்ற சிற்றூரில் பிறந்தவர் நாதமுனிகள். இளமையிலிருந்தே,
திருமாலின் மீது ஆழ்ந்த பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்டு வளர்ந்தவர்.
பாசுரம்
குறிப்பிட்ட திருக்குருகூர் என்ற ஆழ்வார்திருநகரி, தாமரபரணி நதிக்கரையில் அமைந்திருந்தது.
அங்கு சென்ற அவர், பாடல்களைத் தேடி பெரிதும் அலைந்து திரிந்தார். பயனில்லை.
பௌத்த, சமண
மதங்களின் தாக்கத்தால் இவை அழிந்தன என்றனர் சிலர். இவற்றால் புனிதமான வேதங்களின் மதிப்பு
குறைந்துவிடும் என்று, சுவடிகள் ஆற்றில் வீசப்பட்டன என்றனர் வேறு சிலர். அதிர்ந்து
போனார் நாதமுனிகள். இறுதியில் பகவானிடம் சரண் புகுந்தார். அவன் நல்லவழி காட்டினான்.
குருகூர்ச்
சடகோபன்
சடகோபர்
என்ற நம்மாழ்வாரின் நேரடி சீடர் மதுரகவியாழ்வார். அவரது சீடர் பராங்குஸதாஸர். நாதமுனிகளுக்கு
இந்த அடியவரின் அறிமுகம் கிடைத்தது.
‘நம்மாழ்வார்
அருளிச் செய்த ‘திருவாய்மொழி’ என்ற அற்புதமான பாசுரங்கள்தாம் நீர் கேட்டவை. அவர் காலத்துக்குப்
பின் அவை மெல்ல மறைந்து போய்விட்டன. எனினும் ஆழ்வாரின் அருள் பெற்றால், இவற்றை மீண்டும்
அடையலாம்’ என்று ஆறுதலளித்தார் பராங்குஸதாஸர்.
அவரது
குரு மதுரகவியாழ்வார், தம் குருவான நம்மாழ்வார் மீது பாடிய கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற
பாசுரங்களை உபதேசம் செய்து, ‘இவற்றை பக்தியுடன் ஓதினால், நம்மாழ்வாரின் அருளையும்,
அவர் அருளிய பாசுரங்களையும் பெறலாம்’ என்றும் அறிவுருத்தினார்.
முழு
நம்பிக்கையுடனும், ஈடுபாட்டுடனும், ஊன்உறக்கம் பாராது, அப்பாசுரங்களை இடைவிடாது ஓதத்
தொடங்கினார் நாதமுனிகள்.
ஆழ்வாரின்
உள்ளம் கனிந்தது. நாதமுனிகளுக்குக் காட்சி தந்தார். தமது பாடல்கள் மட்டுமின்றி, பன்னிரு
ஆழ்வார்களின் 4000 பாசுரங்களையும் கொடுத்து அருளினார்.
நம்மாழ்வாரின்
தரிசனத்தால் நாதமுனிகள் உள்ளம் சிலிர்த்தது. தேடியலைந்த பொக்கிஷத்தைப் பெற்றதால் மனம்
பரமானந்தத்தில் நிறைந்தது.
திராவிடத்
தமிழ் வேதம் – திவ்யப் பிரபந்தம்
ஆழ்வார்
பாசுரங்களை சுவைத்தார்; அவற்றில் மூழ்கித் திளைத்தார் நாதமுனிகள். பக்திச் சுவை, கவிதைத்
திறன், ஆழ்ந்த ஞானம், வேதாந்த உட்பொருள், தெய்வீகச் சிறப்பு, மனிதநேயப் பண்பாடு போன்றவற்றுடன்
அவை ஒளிர்ந்து மிளிர்வதைக் கண்டு நெகிழ்ந்து போனார். இறைவனாலேயே அருளப்பட்டு, ஆன்மீக
வழிகாட்டிகளாகக் கருதப்பட்ட வடமொழி வேதங்களுக்கு, எல்லாவிதத்திலும் நிகரானவை இவை என்று
உணர்ந்தார்.
‘இவை
திருமாலின் அருள் பெற்றுத்தரும் திவ்யப் பிரபந்தங்கள். தேனினும் இனிய, எளிய, திராவிடத்
தமிழ் வேதங்கள். முக்தி அளிக்கும் சக்தி பெற்றவை’
என
இவற்றின் பெருமையை அறிந்துகொண்ட அவர், ‘தாம் பெற்ற பேரின்பம், வையக மக்களும் பெற வேண்டும்’
என்று, இந்தப் பாசுரங்களை உலகம் அறியப் பரப்பி, நிலைநிறுத்தும் பெரும் பணியில் இறங்கினார்.
‘இவை,
மீண்டும் மறைந்துபோய் விடாமல், நிலைத்திருக்க வேண்டும் என்றால், இவற்றின் புனிதத்தன்மையை
உலகம் உணர வேண்டும்; எளிதில் மக்களின் நினைவில், இவை நிற்கவும் வேண்டும்’ என்று உணர்ந்தார்..
ஆலயங்களில்,
வேதங்களுடன், இந்தப் பாசுரங்களையும் ஓதும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இவ்வாறு, இதன்
தெய்வீக சக்தியையும், புனிதத்தன்மையையும் மக்கள் நன்கு உணரச் செய்தார். இந்த நாலாயிர
திவ்யப்பிரபந்தங்களை ஓதுவதற்காகவே, முதல் திவ்யதேசமான ஶ்ரீரங்கத்தில், அத்யயன உற்சவம்
என்ற வருடாந்திர விழாவை ஏற்படுத்திய பெருமை, திருமங்கையாழ்வாரையும், நாதமுனிகளையுமே
சாரும். தமிழ் வேதத்தின் புகழ் பாடும் இந்த உற்சவத்தின் இடையே வருவது தான், வைகுண்ட
ஏகாதசிப் பெருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
திவ்யப்
பிரபந்தம் – இசை, நடன வடிவில்
நாதமுனிகள்,
சங்கீத, நாட்டிய சாஸ்திரத்திலும் நிபுணர். எனவே, பாசுரங்களுக்கு இசையமைத்து, இப்பிரபந்தங்களுக்கு
இசை வடிவம் கொடுத்தார். இசைப்பாடல்களை மக்களிடையே பரப்பினார். இவ்வாறு, மக்கள் மனதிலும்,
வாழ்விலும் நீங்காத இடம் பிடித்தன இந்த தெய்வீகப் பாசுரங்கள். ராக தாளங்களுடன், வீடுகளிலும்,
மேடைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கின.
அடுத்து,
பிரபந்த வரிகளுக்கு ஏற்ப, அழகிய அபிநயங்களை உருவாக்கினார் அவர். அவற்றை, ‘அரையர் சேவை’
என்ற நடனமாகவே ஆடவும் வகை செய்தார். நாதமுனிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட அரையர் சேவை,
ஶ்ரீரங்கம் போன்ற பெரிய கோயில்களில், இன்றும், பக்தியுடன் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
இதனால்,
‘தாளம் வழங்கி தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்’ என்று நாதமுனிகளைப் புகழ்ந்து போற்றுகிறார்,
மஹான் வேதாந்ததேசிகர்.
திருமால்
பக்தி தழைக்கவும், தமிழ்க்கவிதைச் சிறப்பை உலகம் அறியவும் பெருந்தொண்டாற்றிய இம்மாமுனியை,
முதல் ஆச்சார்யர் என்று நன்றியுடன் வணங்குகிறது, வைணவஅடியார் கூட்டம்.
**
இறுதியில்……….
‘மந்திரத்தால்
மாங்காய் விழுமா, பாசுரத்தை ஓதினால், பிரபந்தம் கிடைக்குமா?’ என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு
ஒரு வார்த்தை.
‘இவ்வாறு
நடக்கவில்லை’ என்று ஒரு வாதத்துக்காக எண்ணினால், பின், பாசுரங்களைக் கண்டறிய, நாதமுனிகள்,
வேறு என்னதான் செய்திருப்பார்?
பலவேறு
காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த, பல்வேறு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு, செவிவழியாகவே
அறியப்பட்டு, பின்னர் மறந்தும், மறைந்தும் போன ஆயிரக்கணக்கான பாசுரங்களை, எந்த வசதிகளும்
இல்லாத பண்டைய காலத்தில் தேடிக் கண்டுபிடித்து, வரிசைப்படுத்தி, பதிவுசெய்து, இசைக்கூட்டி,
வருங்கால சந்ததியினருக்கு அளிக்கும் பகீரதப் பணியை மேற்கொண்டிருப்பார்.
சென்ற
நூற்றாண்டுகளில், தமிழ்த்தாத்தா உ வே. சுவாமிநாதய்யர் செய்த பெரும் சேவையை, 1000 ஆண்டுகளுக்கு முன்னரே
செய்து காட்டியவர் மஹான் நாதமுனிகள் என்று புரிந்தால் போதும்; அவர் பணியின் பிரும்மாண்டமும்,
அம் மாமனிதனின் மகத்துவத்துவமும் நன்கு புலப்படும்.
***

No comments:
Post a Comment