Sunday, 17 May 2015

தாரா ஷிகோ


(Dara Shikoh)
உபநிஷதங்களை உயிர்ப்பித்த முகலாய இளவரசன்


‘வேதங்களின் சாரமே உபநிஷதங்கள். எல்லாம் வல்ல பரம்பொருளின் அருள் பெற்ற இப்புனித உபநிஷதங்களைக் கற்று உணர்பவன், அழிவற்றவன் ஆகிறான். தளைகளிலிருந்து விடுபடுகிறான். சுதந்திர ஜீவனாகிறான்.’

இவ்வாறு, ஹிந்துக்களின் பழம்பெரும் நூலான உபநிஷதங்களின் புகழ்பாடியவன் முகலாய ராஜகுமாரன், தாரா ஷிகோ. பண்டைய பாரதத்தின் பெருமையை உலகறியச் செய்து, மத நல்லிணக்கத்தை வளர்த்த இஸ்லாமியன். இதற்காக இன்னுயிரையே ஈந்தவன்.  




மாமன்னன் ஷாஜஹான், காதல் மனைவி மும்தாஜ் இன் மூத்த மகனாக, 1615 இல் பிறந்தான், தாரா. இனிய குணமும், நல்லொழுக்கமும் கொண்டிருந்த தாரா, சக்ரவர்த்தியாக நாடாள்வதை எதிர்பார்த்திருந்தனர் மக்கள்.





ஞானத்தைத் தேடி……..

தாரா ஒரு அபூர்வப் பிறவி. பல பெண்களை மணக்கும் முகலாயர் வழக்கத்துக்கு மாறாக, நதீரா என்ற ஒரே பெண்ணை மனைவியாக ஏற்றான். இறுதிவரை அவளுடன் மட்டுமே இனிய இல்லறம் நடத்தினான்.

மத வேறுபாடுகளைக் கடந்தவன் அவன். வேதாந்தங்களில் இருந்த ஆர்வமும், உண்மைப் பொருளை உணர்ந்தறியும் வேட்கையும், அவனைப், பண்டிதர்களிடமும், ஞானிகளிடமும் அழைத்துச் சென்றன. எளிய சீடனாக அவர்களைப் பணிந்து, பண்டைய நூல்களைக் கற்கத் தொடங்கினான். அவற்றை ஆழ்ந்து கற்க, அவற்றின் மொழியான சமஸ்கிருதம் பயின்றான். நான்கு வேதங்களை அறிந்தான். வேத தத்துவங்களின் சாரமான உபநிஷதங்களை உணர்ந்து தேர்ந்தான். கண்ணபிரானின் பகவத் கீதையையும், இதிகாச, புராண, ஆன்மீக கிரந்தங்களையும் கற்றுத் தெளிந்தான்.

உபநிஷதங்கள் அவன் மனதைக் கவர்ந்தன. வேதபண்டிதர்கள், இறைஞானிகளுடன் இவை பற்றி விவாதித்தான். இகலோக வாழ்க்கைக்கும், பரலோகப் பேற்றுக்கும் வழிகாட்டும் அதன் அரிய கருத்துக்களில் மூழ்கித் திளைத்தான். ‘பரம்பொருள் எனப்படும் பிரும்மம் ஒன்றே. பேரானந்த சொரூபமான அதை அடைவதுதான், உலக வாழ்க்கையின் குறிக்கோள். மதங்கள், இந்தப் பரம்பொருளை அடைவதற்கான வேறுவேறு மார்கங்கள் தான்’ என்ற உட்பொருள் அவன் மனதில் ஆழமாய்ப் பதிந்தது.


இஸ்லாமிய வேதமும், ஹிந்து உபநிஷதமும்

‘இஸ்லாமிய வேதமான குரானும் இதே கருத்தைத்தான் எடுத்துரைக்கிறது. ஆகவே, ஹிந்து-இஸ்லாமியப் பூசல்கள் அர்த்தமற்றவை’ என்றும் உணர்ந்தான் அவன். அப்போது அந்த உண்மை பளிச்சிட்டது. கிதாப் அல் மக்நூன் (The Hidden Book) எனப்படும் ‘ரகசிய நூல்’ ஒன்றைப் பற்றி, குரான் மிகப் பெருமையாகக் குறிப்பிட்டது. ‘இஸ்லாமிய வேதநூல் உயர்வாகக் குறிப்பிடும் அந்த மறைநூல், ஹிந்துக்களின் புனிதநூலான உபநிஷதங்கள் தான்’ என்று, ஆய்ந்தறிந்து, துணிவுடன் அறிவித்தான் அந்த இஸ்லாமிய அறிஞன்! உபநிஷதங்களை உலகமெங்கும் பரப்புவதையே குறிக்கோளாகவும் கொண்டான்.


அரசியல் சூழ்ச்சி

ஆனால் அரசியலில் அவன் நிலை தாழத் தொடங்கியது. பட்டத்து இளவரசனான தாராவுக்கு பதில், தானே ஆட்சியைக் கைப்பற்ற, சூழ்ச்சிகள் செய்யத் தொடங்கினான், இளைய சகோதரன் ஔரங்கஜேப். சக்ரவர்த்தி ஷாஜஹான் தாராவுக்கு ஆதரவாக இருந்ததைக் கண்டு, தந்தைக்கு எதிராகவே போர்க்கொடியும் உயர்த்தினான்.

வேகமாக மாறிவரும் சூழலை உணர்ந்தான் தாரா. மதவெறியன் ஔரங்கஜேப் இன் சதியை முறியடிக்க படைதிரட்டிப் போராடினான். ஆனால், படைபலமும், சூழ்ச்சித் திறனும் கொண்ட ஔரங்கஜேப் இன் கை ஓங்கத் தொடங்கியது. தாராவின் எதிர்காலம் கேள்விக்குறியானது.


உலகநூலாய் உயர்ந்த உபநிஷதம்

தாரா கலங்கவில்லை. உபநிஷதங்களைப் பற்றிய குறிக்கோளை மறக்கவும் இல்லை.  

‘உபநிஷதங்கள், அசாதாரணமான ஆன்மீகப் பொக்கிஷங்கள். நாடு, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டவை. இவை அழியக்கூடாது. நிலைத்திருந்து மனிதஜாதிக்குப் பயன்தர வேண்டும்’ என்று நம்பிய தாரா, அதற்கான தீவிர முயற்சியில் இறங்கினான்.  

அப்போது, பாரசீகமொழி, அரசாங்க மொழியாகவும், உலக அறிஞர்கள் அறிந்த ஒன்றாகவும் இருந்தது. ‘உபநிஷதம் போன்றவை இம்மொழியில் இருந்தால், அவை மக்கள் மனதில் நிலைத்திருக்கும்; உலகெங்கும் பரவியும் விடும்’  என்று உணர்ந்தான் தாரா.

பழம்பெரும் உபநிஷதங்கள் 52 ஐ, 1657 ஆம் ஆண்டு, பாரசீகத்தில் மொழிபெயர்த்தான். இந்த அற்புத நூல் சிர்ர் ஏ அக்பர் (The Greatest Secret) அதாவது ‘உன்னதமான மறைபொருள்’ என்று போற்றப்பட்டது. அடுத்து, ‘பகவத் கீதை’, ‘யோக வசிஷ்டம்’ போன்ற அரிய நூல்களையும் மொழிமாற்றம் செய்தான்.

தாராவின் இப்பாரசீக உபநிஷதம் உலகெங்கும் பரவியது. உலகமொழிகளான ஆங்கிலம், பிரென்சு, ஜெர்மனிலும் எழுதப்பட்டது. பாரதத்தின் பண்டைய ஆன்மீகச் செல்வத்தை அறிஞர்கள் கண்டனர். வியந்தனர். ‘பாம்பாட்டிகள் நாடு’ என்று அற்பமாக எண்ணிய உலகம், நம்மை மரியாதையுடன் தலைவணங்கத் தொடங்கியது. நம் மக்களின் கண்களும் திறந்தன. நம் பாரம்பரியக் கருவூலத்தை நாமே மதித்துப் போற்றும் நிலை உருவானது. 

ஆனால், இந்த அற்புதங்களைக் காண, தாரா உயிருடன் இருக்கவில்லை.   

சோக நாடகம்
 
ஔரங்கஜேப் அரசியல் காய்களை வேகமாக நகர்த்தினான். 1658 இல் தலைநகர் ஆக்ராவின் மீது படையெடுத்தான். தாராவை வீழ்த்தினான். தந்தை ஷாஜஹானை சிறை பிடித்தான். தன்னையே அரசனாக அறிவித்துக் கொண்டான். சதிகார சகோதரனை எதிர்த்துப் போராடிய தாராவின் முயற்சிகள் பயன்தரவில்லை. சிந்த் பகுதியில் தஞ்சம் புகுந்த தாராவையும், மகனையும், அப்பகுதி சிற்றரசன் காட்டிக் கொடுத்தான்.

1659, ஜூன் மாதம். சகோதரன் தாராவைக் கைதியாக்கி, சங்கிலிகளால் பிணைத்து, தில்லிநகர் தெருக்களின் வழியே, இழுத்து வந்தான் ஔரங்கஜேப். ‘தாரா உயிருடன் இருப்பது, என் அரசபதவிக்கே ஆபத்து. ஆகவே அவனைத் தீர்த்துக் கட்டவேண்டும்’ என்று தீர்மானித்தான்.

தந்தையோ சிறையில். தாயோ தாஜ்மஹால் சமாதியில். தாரா தனிமரமானான்.

ஆனால், மக்கள் தாராவின் பக்கம் இருந்தனர். அவன் மீது அனுதாபம் கொண்டிருந்தனர்.

ஆகவே தாராவைக் குற்றவாளியாக்கித் தீர்த்துக்கட்டுவதற்காக கபடமான திட்டம் தீட்டினான் ஔரங்கஜேப்.

மந்திரிப் பிரதானிகள், மதகுருமார்களின் குழு ஒன்று தாரா மீது விசாரணை நடத்தியது. எந்தக் குற்றத்தையும் சுமர்த்த முடியாத அது, இறுதியில், ஔரங்கஜேப் விருப்பப்படி, அவன் மீது தெய்வநிந்தனைக் குற்றம் சாட்டியது. மதவிரோதி என்று களங்கம் சுமத்தியது. மதஒற்றுமை கண்ட அந்த மாமனிதனுக்கு மரணதண்டனை விதித்தது.

1659 ஆகஸ்டு 30 ஆம் நாள் இரவு. பயத்தில் உறைந்து போயிருந்த இளம் மகன் கண்முன்னே, ஔரங்கஜேப்பால் படுகொலை செய்யப்பட்டான், தாரா.

இவ்வாறு, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய தாராவின் வரலாறு, ரத்தத்தால் எழுதப்பட்டுவிட்டது.  
***

ஔரங்கஜேப்புக்கு பதிலாக தாரா அரியணை ஏறியிருந்தால்…………… நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும் என்பது அறிஞர்களின் கருத்து. நாடு வலுவிழந்திருக்காது. ஆங்கில ஆட்சிக்கு அடிமையாகி சீரழிந்திருக்காது. மதப்பூசல்களுக்கு ஆளாகி பிளவுபட்டிருக்காது.

பின், நமக்கு ஏன் இந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போனது?

உபநிஷதங்களின் நாயகனான அந்த ஆண்டவனே அறிவார்!


* * * * * * * 

No comments:

Post a Comment